

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது அக்பர் (42). இவருக்கு அவரது நண்பர் மூலம் சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல் அலுவலராக பணிபுரிந்த கொருக்குப்பேட்டை, டிரைவர் காலனியைச் சேர்ந்த மஞ்சுளா (47) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது, மஞ்சுளா தனக்கு அரசு அதிகாரிகள் பலரது நட்பு உள்ளது. எனவே, நான் நினைத்தால் தமிழக வீட்டு வசதி வாரியம் மூலம் எம்.கே.பி. நகர் பகுதியில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தரமுடியும் என கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பி முகமது அக்பர் 2021ம் ஆண்டு ரூ.3.5 லட்சத்தை மஞ்சுளாவிடம் கொடுத்துள்ளார். மேலும், இதேபோல் நண்பர்கள் 3 பேருக்கு வீடு ஒதுக்கீடு பெற ரூ.8.5 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் மஞ்சுளா வீடு ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்கவில்லை.
வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த அக்பர் இது தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மஞ்சுளா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், மஞ்சுளா இதேபோன்று தமிழக வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக ஏற்கெனவே 1 குற்ற வழக்கு உள்ளதும், தற்போது பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.