சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு: பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உடல்கள் மீட்பு
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வெள்ளாளன்விளையில் தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக, கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் நேற்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர்.
காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும், மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.
காரில் இருந்த சைனி கிருபா(26), ஜெரினியா எஸ்தர்(23) ஆகிய 2 பேரும் சுதாரித்துக் கொண்டு, காரின் கதவைத் திறந்து வெளியே குதித்து தப்பினர். காரில் இருந்த மோசஸ் (50), அவரது மனைவி வசந்தா (49), அவரது மகன் ஹெர்சோம் (29), ஜெயபால் மகன் ரவி கோவில்பிச்சை (45), அவரது மனைவி லெட்ரியா கிருபா(40), ஹெர்சோமின் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 6 பேரும் காருடன் கிணற்றுக்குள் மூழ்கினர்.
கார் கிணற்றுக்குள் பாய்ந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹெர்சோமை கிராம மக்கள் மீட்டனர்.
தகவல் அறிந்து சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 பேர் உடல்கள் மீட்பு: இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து தேடும் பணி நடந்தது. இந்நிலையில், பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, கிணற்றில் மூழ்கிய குழந்தை உள்ளிட்ட 5 பேரின் உடல்களும் நேற்று இரவு மீட்கப்பட்டன. விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
