வீடியோகாலில் சிபிஐ அதிகாரிபோல பேசி மோசடி: முத்துப்பேட்டை மருத்துவரை மிரட்டி ரூ.1.19 கோடி பறிப்பு

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

திருவாரூர்: வீடியோகாலில் சிபிஐ அதிகாரி போலபேசி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீரா உசேன்(82). மருத்துவரான இவர், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவரது செல்போனுக்கு வீடியோல் அழைப்பு வந்துள்ளது.

எதிர்முனையில் பேசிய நபர், தன்னை மும்பை சிபிஐ போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு, ‘‘உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளோம். உங்களது ஆதார், பான்கார்டு எண்களை அனுப்புங்கள்" என தெரிவித்துள்ளனர். இதனால், அச்சமடைந்த மீரா உசேன், தான் ஒரு மருத்துவர் என்றும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

எதிர்முனையில் பேசிய நபர், ‘‘இந்த அழைப்பை துண்டிக்காமல், உடனடியாக நீங்கள் ரூ.2 கோடி பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், நாங்கள் நேரில் வந்து உங்களை கைது செய்ய நேரிடும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்த மீரா உசேன், தனது வங்கிக் கணக்கிலிருந்து, வீடியோகாலில் பேசியவர் கூறிய 2 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.55 லட்சம் மற்றும் ரூ.64 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், அந்த கும்பல் மறுபடியும் போன் செய்தபோது சுதாரித்துக் கொண்ட மீராஉசேன், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in