

திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் ஏறி மது அருந்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் எழுப்பிய புகாரை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ மற்றும் மண்டல தலைவர் ஆகியோர் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நேற்று மாலை தண்ணீர் தொட்டி மீது அமர்ந்திருந்த இரு மர்ம நபர்களை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபர்கள், தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் அதிகாரிகளிடம் விசாரித்தார். 2-ம் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், தண்ணீர் தொட்டியை பார்த்துவிட்டு அங்கு மனிதக் கழிவு கலந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லையென தெரிவித்தார்.
குடிநீர் தொட்டி பகுதியை ஆய்வு செய்துவிட்டு, தொட்டியில் இருந்த தண்ணீரை மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், பொதுமக்கள் முன்னிலையில் குடித்து காண்பித்தார். பொதுமக்கள் தொடர்ந்து ஏற்க மறுக்கவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்தனர். இது தொடர்பாக வடக்கு போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்த நிஷாந்த் (19) மற்றும் திருமுருகன்பூண்டியை சேர்ந்த சஞ்சய் (22) இருவரும் நண்பர்கள். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த நிலையில் நேற்று தண்ணீர் தொட்டி மேல் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மனிதக் கழிவு எதுவும் தண்ணீர் தொட்டியில் கலக்கவில்லை. இந்நிலையில், 30 அடி தண்ணீர் தொட்டியின் மீது அபாயகரமாக அமர்ந்து மது அருந்திய நிலையில், இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.