

விருதுநகர்: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விசாரணை, விருதுநகர் நீதித்துறை நடுவர் மன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று (மே 16) மாற்றம் செய்யப்பட்டது.
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வந்த விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இது தொடர்பாக, ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் ஆஜாரானார்கள். அப்போது, வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாகவும், ஜூன் 16-ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.