

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வேலை செய்த வீட்டிலேயே கைவரிசை காட்டி தப்பிய நேபாள தம்பதியை தனிப்படை அமைத்து நீலாங்கரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி. நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
மூத்த மகளின் தோழி மூலம் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி பினிதா (23) வீட்டு பணிப் பெண்ணாகவும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மகேஷ் குமார் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஓர் ஆண் குழந்தை உள்ள இந்த நேபாள தம்பதியை, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு மகேஷ் குமார் தன் மனைவியுடன் காவேரிப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60 பவுன் தங்க, வைர நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் வேலை செய்து வந்த நேபாள தம்பதியையும் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த மகேஷ் குமார், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேலை செய்த வீட்டிலேயே திருடிவிட்டு தப்பிய நேபாள தம்பதியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் 60 பவுன் திருட்டு: சைதாப்பேட்டை பஜார் சாலையில் நகைக் கடை நடத்தி வருபவர் சுந்தர். வீடு, கடை என இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் என்ற நபரை நகைக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதன் பிறகு வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ரோகித் கடந்த 7 தேதி மீண்டும் சென்னை வந்து பணிக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நகைகளை சோதித்து பார்த்த போது கடையிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த சுந்தர், ஊழியர் ரோகித்தை தேடியபோது அவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையுடன் மாயமான நகைக்கடை ஊழியர் ரோகித்தை தேடி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்து 60 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப் பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.