

சென்னை: ஜவுளிக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 31 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து தப்பிய பெண் உட்பட 3 பேர் கும்பலை எம்.கே.பி. நகர் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 3-வது லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் ஹித்தேஷ்(26). இவர் எம்.கே.பி. நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவரது பெற்றோர் அண்மையில் பெங்களூரு சென்றுவிட்டனர். இதனால், ஹித்தேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, இவர் இயற்கைக்கு மாறான உறவுகொள்ளும் (ஓரினச் சேர்க்கை) நபர்கள் அதிகளவில் பயன்படுத்தும் `கிரிண்டர்' செயலி மூலம் சிலரை தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் ஹித்தேஷ் வீட்டுக்கு 35 வயது மதிக்கத்தக்க 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் ஆட்டோவில் வந்துள்ளனர்.
அவர்கள் சிறிது நேரம் ஹித்தேஷுடன் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் திடீரென ஹித்தேஷை தாக்கி, குளியல் அறையில் கட்டிப்போட்டு 31 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தப்பிய ஹித்தேஷ் நடந்த விவகாரம் குறித்து எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கிரிண்டர் செயலியை இயற்கைக்கு மாறான உறவு கொள்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி விருப்பம் உள்ளவர்களை தேர்வுசெய்து அவர்களுடன் தனிமையை பகிர்ந்து கொள்கின்றனர். இச்செயலியில் தொடர்பு கொள்பவர்களை சிலர் மிரட்டி பணம் பறிப்பது, போதைப் பொருள் விற்பனை செய்வது உட்பட பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்'' என்றனர்.
35 பவுன் திருட்டு சம்பவம்: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சரிபார்த்தார்.
அப்போது அதில் இருந்த 41 பவுன் நகைகளில் 35 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து பத்மநாபன் வீட்டில் வேலை செய்யும் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.