

கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தனியார் பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் சேங்கல் அருகேயுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்படும் தனியார் பள்ளியில் தாளாளராக திண்டுக்கல் குஜிலியம்பாறை அடுத்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த யுவராஜ்(41) என்பவரும், தமிழ் ஆசிரியராக முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த நிலவொளி(42) ஆகியோரும் பணிபுரிந்தனர்.
அப்போது, 2022-ல் 10-ம் வகுப்பு படித்த மாணவி, தனக்கு நிலவொளி, யுவராஜ் ஆகியோர் பாலியல் தொந்தரவு அளித்ததாக லாலாபேட்டை போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றம் சுமத்தப்பட்ட நிலவொளி, யுவராஜுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீஸாரை, காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.