Published : 15 May 2025 03:58 PM
Last Updated : 15 May 2025 03:58 PM
சென்னை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பாஜக பிரமுகரிடம் பணம் திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொதுக் கூட்டங்களை குறிவைத்து, கைவரிசை காட்டியது தெரியவந்தது.
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கான வரவேற்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். அக்கட்சி தொண்டர்களும் குவிந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் பகுதியில் வசிக்கும் பாஜக பிரமுகர் அசோக்குமார் ஜெயின் (45) என்பவரும் கலந்து கொண்டிருந்தார். மேலும், நிகழ்ச்சியை செல்போனில் மும்முரமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதையும், கூட்ட நெரிசலையும் பயன்படுத்தி, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த ரூ.41 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் ஜெயின் இது தொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் அசோக் குமார் ஜெயினிடமிருந்து பணத்தை திருடியது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் (55), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (39), கே.கே.நகரைச் சேர்ந்த மணி என்ற தாடி மணி (65) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நோட்டமிட்டு, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம், செல்போன் மற்றும் மணிபர்சுகளை திருடி வந்தது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட பாஸ்கர் மீது 4 திருட்டு வழக்குகளும், கோபால் மீது 2 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் தாடி மணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT