

ராணிப்பேட்டை: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரமடைந்த கணவன் மதுபோதையில் தனது மாமியார் மற்றும் உறவினர்களான சித்தி, சித்தப்பா ஆகிய 3 பேரையும் நேற்றிரவு (மே 14) கொலை செய்த சம்பவம் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அடுத்த புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (30), விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலுவின் சித்தப்பா மகனான கொடைக்கல் பகுதியைச் சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால், ஏற்பட்ட பிரச்சினையால் புவனேஸ்வரி தனது கவணரைப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
தற்போது, புவனேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த தகவலை அறிந்து பாலு, ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ய நேற்றிரவு (மே 14) தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கு புவனேஸ்வரி இவரை கண்டதும் ஓடி ஒளிந்துக்கொண்டார். ஆத்திரத்தில் பாலு தனது மாமியார் பாரதியை கத்தியால் தலை மற்றும் பின்பக்கம் கழுத்தில் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். மேலும், அங்கிருந்து புறப்பட்ட பாலு, கொடைக்கல் பகுதியில் உள்ள தம்பி விஜய்யின் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு விஜய் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவரது தந்தையான அண்ணாமலை (52) மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி (45) ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து பாலு வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பெயரில் வாலாஜா காவல்துறையினர் கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள அவரது மாமியார் பாரதி உடலையும், கொண்டப்பாளையம் காவல் துறையினர் உயிரிழந்த அண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாலாஜா மற்றும் கொண்டப்பாளையம் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காவல்துறையினர் பாலுவை இன்று (மே 15) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலை நடந்த இடத்தை அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற போது, சிறுநீர் கழிப்பதாக கூறி காவல்துறையினரிடமிருந்து தப்பியோட முயன்ற போது, கால் தவறி கீழே விழுந்ததில் பாலுவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஒரே இரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.