

சென்னை: பெங்களூருவிலிருந்து மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, கொத்தவால்சாவடி காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மதியம், மின்ட் தெருவிலுள்ள ஒரு துணிக்கடை அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் வைத்திருந்த கொத்தவால் சாவடி, அண்ணாபிள்ளைத் தெருவைச் சேர்ந்த மணிஷ்குமார் (24) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட மணிஷ்குமார் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், இவர் கொத்தவால்சாவடி பகுதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருவதும், இவரது நண்பர் பெங்களூரிலிருந்து வாங்கி வந்த மெத்தம்பெட்டமைனை இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.