Published : 15 May 2025 06:59 AM
Last Updated : 15 May 2025 06:59 AM
சென்னை: ஐ.டி. பெண் ஊழியரை கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சி செய்த பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.
மேலும் அங்குள்ள பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 12-ம் தேதி இரவு இவர் பணி முடிந்து வீடுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது திடீரென வாயை பொத்தி, மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். உடனே அந்த இளம் பெண், தன்னை கடத்திய நபரின் கையை பலமாக கடித்தார்.
கடத்தல் நபரின் பிடி தளர்ந்ததும் அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் கால்பந்து பயிற்சியை முடித்துவிட்டு நின்றிருந்த இளைஞர்கள் சம்பவ இடம் விரைந்து, இளம் பெண்ணை மீட்டனர். இதற்கிடையில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பி ஓடினார்.
இந்த விவகாரம் குறித்து துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், ஐ.டி பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்றது துரைப்பாக்கம், ஸ்ரீசாய் நகர் 6-வது குறுக்குத் தெருவில் தங்கி உள்ள பரோட்டா மாஸ்டர் லோகேஷ்வரன்(24) என்பது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சாப்பிடுவதற்காக உணவகத்துக்கு தினமும் வந்து சென்ற இளம் பெண்ணை நோட்டமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டதாக லோகேஷ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT