பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை: பாலியல் வன்கொடுமை புகார் முதல் பரபரப்பு தீர்ப்பு வரை

பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை: பாலியல் வன்கொடுமை புகார் முதல் பரபரப்பு தீர்ப்பு வரை
Updated on
2 min read

கோவை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செவ்வாய்க்கிழமை (மே 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை...

> கடந்த 12.02.20219-ல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரிடம் புகார் அளித்தார். சபரிராஜன் உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் 24.2.2019-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் கைது செய்யப்பட்டனர்.

> இதற்கிடையே, இளம்பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும், அந்த பெண் கதறுவதுமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, தனக்கும், இவ்வழக்கிற்கும் தொடர்பு இல்லை என வீடியோ வெளியிட்டார். கடந்த 5.3.2019-ல் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.

> திருநாவுக்கரசின் ஆப்பிள் போனை போலீஸார் கைப்பற்றினர். அதில், நூற்றுக்கணக்கான பெண்களின் வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், 5-வது குற்றவாளியான மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.

> 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி நிஷா பார்த்திபன் வழக்கை விசாரித்தார். சபரிராஜன் வீட்டில் சோதனை நடத்தியபோது லேப்டாப் கைப்பற்றப்பட்டது. சபரிராஜன் லேப்டாப், திருநாவுக்கரசுவின் செல்போன் ஆகியவை முக்கிய மின்னணு ஆதாரங்களாக வழக்கில் சேர்க்கப்பட்டன. அதிலிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தபோது, ஒரே பெண்ணை பல முறை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோவாக பதிவு செய்திருப்பது உறுதியானது.

> 25.04.2029-ல் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ பல ரகசிய குழுக்களை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து விசாரித்தனர். வீடியோக்களில் இருந்த 20 பெண்களை கண்டறிந்து விசாரித்தனர்.

> சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 24.05.2019-ல் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

> மாக்கினாம்பட்டி அருகே உள்ள திருநாவுக்கரசின் சின்னப்பபாளையம் வீடு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ய பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த வீட்டில் சவுண்ட் புரூப் செய்யப்பட்டு, வீட்டிலிருந்து கத்தினால் சத்தம் வெளியே கேட்காதவாறு அறைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன.

> சிபிஐ விசாரணையில், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் 22.2.2021-ல் இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

> பின்னர், 9-வது நபராக அருண்குமார் கைது செய்யப்பட்டார். அருண்குமார் கைது தொடர்பாக 16.8.2021 அன்று மூன்றாவது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

> இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 48 சாட்சிகளிடம் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மின்னணு பொருட்கள் இவ்வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. அதில் பதிவான காட்சிகள் குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவற்றை கண்டறிய முக்கிய சாட்சியாக இருந்தது.

> ‘டிஎன் 41 அட்டாக் பாய்ஸ்’ என்ற பெயரில் இவர்கள் வாட்ஸ் அப் குழு தொடங்கி, பெண்களின் வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

> வழக்கின் தன்மை கருதி கைதான 9 பேருக்கும் பிணை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 7 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

> பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்சி என யாரும் பிறழ்சாட்சியாக கடைசி வரை மாறவில்லை. விசாரணை முழுவதும் சிபிஐ கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் நடைபெற்றது.

> ஏறத்தாழ 1,500 பக்கங்களில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளிடம் மொத்தம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டன.

> இன்று (மே 13) இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in