கால்நடை மருந்து விற்பனையில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.22.60 லட்சம் மோசடி: இருவர் கைது

கைது செய்யப்பட்ட யரகோர்லா ஸ்ரீனு மற்றும் அஜ்மீரா சுதாகர்
கைது செய்யப்பட்ட யரகோர்லா ஸ்ரீனு மற்றும் அஜ்மீரா சுதாகர்
Updated on
1 min read

சென்னை: மேற்கு ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து கால்நடை மருந்துகளை வாங்கி விற்று அதிக லாபம் பெறலாம் எனக் கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.22.60 லட்சம் நூதன மோசடி செய்த தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டை, நாராயண முதலி தெருவில் வசிப்பவர் சுரேஷ் குமார் பி கவாட் (53). இவர், பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘தனது பெயர் ஹென்றி மென்சா என்றும், தான் மேற்கு ஆப்ரிக்கா நாட்டிலிருந்து பேசுவதாகவும், தான் கால்நடைகளுக்கான பல்வேறு வியாதிகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இந்தியாவில் என்னுடைய நிறுவனத்தை நடத்த விரும்புவதாகவும், எனது நிறுவனத்தின் ஏஜெண்டாக உங்களை பணியமர்த்த விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

நான் சொல்லும் மருந்துகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் போதும், அதை அதிக விலை கொடுத்து நானே பெற்றுக் கொள்கிறேன். இதனால், உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுரேஷ் குமார், அந்த நபர் குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி, மருந்துகளை பெற முயற்சித்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் உறுதி அளித்தபடி மருந்துகளை அனுப்பி வைக்கவில்லை. மேலும், ஹென்றி மென்சா என்று பேசிய நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் குமார் இது தொடர்பாக வடக்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல் கட்டமாக சுரேஷ் குமார் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கின் விபரங்கள், பணபரிவர்த்தனை தொடர்பான விவரங்கள், முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் மோசடி கும்பலைச் சேர்ந்த தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த அஜ்மீரா சுதாகர் (31), ஆந்திர மாநிலம் பிரகாசம் பகுதியைச் சேர்ந்த யரகோர்லா ஸ்ரீனு என்ற அகில் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள ஹென்றி மென்சா என்று கூறி பேசிய நபர் உள்பட மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “அஜ்மீரா சுதாகர் கும்பல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளது. இவர்களது பின்னணியில் உள்ள அனைவரையும் விரைவில் கைது செய்வோம்,” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in