

சென்னை: சினிமா விநியோகஸ்தர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டார். திருட்டுக்கு உடந்தையாக இருந்த 17 வயது இளஞ்சிறாரும் பிடிபட்டுள்ளார்.
சென்னை வடபழனி, டாக்டர் ராகவன் காலனி பகுதியைச் சேர்ந்த போஜராஜ் (43). மும்பையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது தந்தை பிரேமானந்தன். இவர், சினிமா பட விநியோகஸ்தர் என கூறப்படுகிறது. இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், தற்காலிகமாக சோழிங்கநல்லூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி உள்ளார். இதனால், வடபழனியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, 10 நாட்களுக்கு ஒருமுறை வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி, வடபழனி வீடு திறந்த நிலையில் இருப்பதாக அருகிலிருந்தவர்கள் பிரேமானந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் விரைந்து சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த சுமார் 450 கிராம் எடையுள்ள வெள்ளி விளக்குகள், கொலுசுகள், தட்டுக்கள், கிண்ணம், டம்ளர்கள், சாமி டாலர் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து போஜராஜன் வீட்டில் திருடப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டது. இத்திருட்டுக்கு உதவியதாக சந்தோஷின் கூட்டாளியான 17 வயது இளஞ்சிறாரும் பிடிபட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.