Published : 12 May 2025 02:44 PM
Last Updated : 12 May 2025 02:44 PM
சேலம்: சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிஹார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் ( 65 ). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (60). வீட்டின் மாடியில் அவரது மகன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கரனும் அவரது மனைவி வித்யாவும் நேற்று மாலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் வித்யா உயிரிழந்துவிட்டார்.
படுகாயத்துடன் இருந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியில் உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்து, சூரமங்கலம் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் கொண்டு வரப்பட்டு கொலை நடந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , துணை ஆணையர் சிவராமன் மற்றும் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐந்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியில் வசித்து வந்த சந்தோஷ்குமார் (30), என்பவர் கொலை செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. மளிகை கடை நடத்தி வந்த வித்யா, அதிக நகை அணிந்திருப்பது அவருக்கு தெரிந்ததாகவும், அந்த நகையை பறித்தால் கடன் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, வித்யா மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோரை கத்தியால் தாக்கி, வித்யா அணிந்திருந்த 3 சவரன், அவரது கணவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பியது தெரிய வந்தது. சந்தோஷ்குமார், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பிஹாரில் இருந்து சேலம் வந்து, டைல்ஸ் கூட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். அவர், 35 வருடங்களுக்கு முன்பு பிஹாரிலிருந்து சேலத்தில் குடியேறிய, சுனில்குமார் என்பவரின் மகளை திருமணம் செய்துகொண்டு, 3 குழந்தைகளுடன் சேலத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரிடமிருந்து அவர் கொள்ளையடித்துச் சென்ற , 3 சவரன் மற்றும் 7 சவரன் தங்க நகைகளையும் , சம்பவத்தின்போது அணிந்திருத்த ரத்தக் கறை படிந்த உடைகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT