

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மாணவர்களிடம் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, பாதியில் பயிற்சியை நிறுத்தியது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் அப்பயிற்சி மையத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ‘பிட்ஜி’ என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே.நகரில் இப்பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்குள்ள பயிற்சி மையங்களில் மொத்தம் 191 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் பெற்றோரும், இந்தாண்டு தொடக்கம் முதலே பயிற்சி காலத்துக்கான கட்டணத்தை செலுத்தி வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், இப்பயிற்சி மையம் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்காமல், திடீரென பயிற்சியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயிற்சி மையத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குநர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 9-ம் தேதி கீழ்ப்பாக்கம், கே.கே.நகரில் உள்ள பயிற்சி மையங்கள் மற்றும் அங்கூர் ஜெயினின் 2 வீடுகள் என 4 இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 22 காசோலைகள், மாணவர்களின் அடையாள அட்டைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து மாணவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.