

தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் மனைவி மற்றும் மாமியாரை பிளேடால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (29). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பவானி (26). சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக பவானி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், லோகேஷ் தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக அவரது வீட்டுக்கு நேற்று முன் தினம் சென்றார். அப்போது, அவர் மது போதையில் இருந்ததால், லோகேஷுடன் செல்ல பவானி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் மறைத்து வைத்திருந்த பிளேடால் பவானியின் வலது கையில் கிழித்தார்.
தடுக்க வந்த அவரது தாயாரையும் பிளேடால் கிழித்தார். இதில் காயமடைந்த 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர்.