Published : 10 May 2025 08:48 PM
Last Updated : 10 May 2025 08:48 PM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் விற்பனை முகவரை, டெல்லியில் இருந்து வந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளியை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு என்பவரது மகன் சதாசிவம்(25). பி.இ பட்டதாரியான இவர் , வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீலட்சுமி ஏஜென்ஸி என்கிற பெயரில், செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும் ஆன்-லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று (மே 10) அதிகாலை 5.30 மணியளவில் சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் உள்ள சதாசிவம் வீட்டிலும், வேப்பனப்பள்ளியில் உள்ள அவரது கடையிலும், பெங்களூர் சிபிஐ டிஎஸ்பி சாய்கிரண் தலைமையிலான டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் 2 பிரிவுகளாக சோதனை நடத்தினர். கடை மற்றும் வீட்டில் மாலை 5.30 மணி வரை தொடர் விசாரணை நடந்தது. பின்னர், கடையில் இருந்து ஒரு மடிக்கணினி, 3 செல்போன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், சதாசிவத்தை விசாரணைக்காக கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள், வேப்பனப்பள்ளி போலீஸாருக்கும், சதாசிவத்தின் குடும்பத்தினருக்கும் கைது அறிவிப்பு கடிதத்தை வழங்கினர். சதாசிவம் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதாசிவம் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண் மூலம் பல்வேறு மோசடி பணப் பரிவத்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் தேடுதல் உத்தரவு (search warrant) பெற்று இன்று சதாசிவத்தின் வீடு, கடைகளில் சோதனை நடத்தி, ஒரு மடிக்கணினி, 3 செல்போன்களை பறிமுதல் செய்தும், அவரை கைது செய்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT