சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு பாகிஸ்தான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு பாகிஸ்தான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: பாகிஸ்தான் பெயரில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ம் தேதி சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

போர் பதற்றத்தால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் பெயரை பயன்படுத்தி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் அலுவலகத்துக்கு நேற்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி நேற்று நடைபெறவில்லை என்றாலும் கூட, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில், மைதானத்தில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, சேப்பாக்கம் மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in