Published : 08 May 2025 07:20 AM
Last Updated : 08 May 2025 07:20 AM

டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என மிரட்டி கடை உரிமையாளரிடம் ரூ.16.50 லட்சம் பறிப்பு: ஒருவர் கைது

படம்: மெட்டா ஏஐ

சென்னை: டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் எனக் கூறி கடை உரிமையாளரை டிஜிட்டல் கைது செய்து ரூ.16.50 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார்(37). ஆட்டொமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி இவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் ‘நாங்கள் டெல்லி சைபர் கிரைம் தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக புகார் வந்துள்ளது. எனவே, நீங்கள் உடனடியாக டெல்லியில் ஆஜராக வேண்டும்.

அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். உங்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபிக்க உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணம் முழுவதையும் நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் உடனடியாக திருப்பி அனுப்பி விடுகிறோம். மீறினால் டெல்லி காவல்துறை உங்களை வீடு தேடி வந்து கைது செய்யும். மேலும், நீங்கள் கைது செய்யப்பட்ட தகவல் பத்திரிகை மற்றும் செய்தி சேனல்களுக்கு வழங்கப்படும்’’ என மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்துபோன ராஜ்குமார், தனது வங்கி கணக்கிலிருந்த ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார், இதுதொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பணப்பரிமாற்றம் நடைபெற்ற வங்கி எண் அடிப்படையில் மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சிதம்பரம் நகரைச் சேர்ந்த ஆனந்த குமார்(43) என்பவரை கைது செய்தனர். இவர், மோசடி கும்பலுக்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

இவரது வங்கி கணக்குக்கு மோசடி பணம் பெறப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக் கொண்டு, மீதி தொகையை மோசடி கும்பலுக்கு ஆனந்த குமார் அனுப்பி வைத்துள்ளார். இதற்காக இவர் 25 வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளார். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x