

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த 10 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபுதாபியில் இருந்து கடத்தி வந்த நபர் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு கடந்த ஏப். 30-ம் தேதி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கன்வேயர் பெல்டுக்கு வந்தது. உடைமைகளை எடுத்துக் கொண்டு, சுங்க சோதனையை முடித்துவிட்டு பயணிகள் வெளியில் சென்றனர்.
ஆனால், கன்வேயர் பெல்டில் ஒரு பெரிய பை மட்டும் யாரும் எடுக்காமல் சுற்றிக்கொண்டு இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, அதில் அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்த பை ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 2 நாட்கள் ஆகியும் அந்த பைக்கு உரிமை கோரி யாரும் வராததால், அந்த பை சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுங்க அதிகாரிகள் பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் இருந்தன. அதற்கு இடையே தலா 1.7 கிலோ எடை கொண்ட 10 ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
15 கிமீ முதல் 20 கிமீ வரை துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய சக்தி வாய்ந்த இந்த ட்ரோன்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சட்ட விரோதமாக கடத்தி வந்த நபர் யார் என்று சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.