அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகை திருட்டு: ராஜஸ்தானை சேர்ந்தவர் தலைமறைவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அரியலூர்: அடகு கடை பெட்டகத்தில் இருந்த 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக அரியலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருட்டில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரஸ்மல் மகன் ஆசாத்லோடா(46). அரியலூர் சின்னக்கடை வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த கோபால்தாஸ் மகன் கணையாலால் (38) என்பவரை அடகுக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.

ஆசாத்லோடாவின் கடைக்கு அடகுக்கு வரும் நகைகள், அவரது தங்கையின் கணவர் விகாஸ்ஜெயின்(49) என்பவர் நடத்தி வரும் அடகுக் கடையில் உள்ள பெட்டகத்தில் வைப்பது வழக்கம். அதன்படி, மே 3-ம் தேதி மாலை 5 மணிக்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் நகைகளை வைக்கச் சென்ற கடை பணியாளர் கணையாலால், நகையை பெட்டகத்தில் வைக்காமல், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து, ஆசாத்லோடா நேரில் சென்று பெட்டகத்தை பார்த்தபோது, அதில் இருக்க வேண்டிய 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கணையாலால் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கணையாலாலை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in