பட்டுக்கோட்டை அருகே பாஜக மதுரை மகளிரணி நிர்வாகி படுகொலை: நடந்தது என்ன?

கொல்லப்பட்ட சரண்யா மற்றும் கைது செய்யப்பட்ட கபிலன், குகன், பார்த்திபன்.
கொல்லப்பட்ட சரண்யா மற்றும் கைது செய்யப்பட்ட கபிலன், குகன், பார்த்திபன்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுரையைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது 2-வது கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(45). மதுரை மேலூரில் டிராவல்ஸ் நடத்தி வந்த இவர், தற்போது உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.

இவர் மேலூரில் நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தில், செல்லூரில் வசித்து வந்த சரண்யா(38) என்பவர் பணியாற்றி வந்தார். கணவரை இழந்த சரண்யாவை, பாலன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பின்னர், சரண்யாவுக்கு பாஜக மதுரை மாநகர மகளிரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, மதுரையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் பாலன், சரண்யா, சரண்யாவின் மகன்கள் ஆகியோர் 8 மாதங்களுக்கு முன்பு உதயசூரியபுரத்துக்கு வந்து, வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கடைத்தெருவில் பால் பாக்கெட் வாங்கிய சந்தியா, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் சரண்யாவை வழிமறித்து, அவரது தலையை துண்டித்துக் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

தகவலறிந்து வாட்டாத்திக்கோட்டை போலீஸார் சரண்யாவின் உடலை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், பாலனின் முதல் மனைவியின் மகனான கபிலன்(20), அவரது நண்பர்கள் குகன்(20), கொண்டிக்குளம் சர்கார்தோப்பு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(20) ஆகியோர் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக முயன்றனர். ஆனால் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்கள் மதுரை அண்ணா நகர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து, வாட்டாத்திக்கோட்டை போலீஸார் மதுரை சென்று காவலில் எடுத்து விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பாலன் கழுகுபுலிக்காட்டில் ரூ.43 லட்சம் மதிப்பிலான இடத்தை வாங்கி, கபிலன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதையறிந்த சரண்யா, பாலனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். எனவே, அவரைக் கொல்ல முடிவு செய்த பாலன், இரு நாட்களுக்கு முன்பு கபிலன், குகன் ஆகியோரை வரவழைத்து, சரண்யாவைக் கொலை செய்துள்ளார்" என்றனர். தொடர்ந்து, கபிலன், பாலன் உட்பட 4 பேரையும் வாட்டாத்திக்கோட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அமைச்சர் காரில் செருப்பு: 2022-ல் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அப்போதைய பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் ஆகிய இரு தரப்பினரிடையே பிரச்சினை நேரிட்டது.

அப்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் சரண்யா உட்பட பாஜக பெண் நிர்வாகிகள் 3பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in