

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த 2-ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்ற மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்ட நிலையில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமரசமாகி சென்று விட்டனர்.
இந்த நிலையில் மே 3-ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை உளுந்தூர்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து, அது விபத்து என்றும் தெரிவித்து, அது தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.
இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஓட்டுநர் முபாரக் அலி மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் விசாரணை செய்து மதுரை ஆதீனம் சென்ற காரின் ஓட்டுனர் மீது இன்று (மே 5) 2 பிரிவுகளில் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.