

சென்னை: திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த மருத்துவ மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தயாரித்த வீடியோக்களையும், அவர் உடை மாற்றுவதையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பழனியம்மன் கோயில் 3-வது சந்து பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (39). இவர் கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 30 வயதுடைய முதுகலை மருத்துவ மாணவி ஒருவருக்கு நீச்சல் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது, மாணவியை பாலாஜி ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் அவர் கேட்க, மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பாலாஜி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி அதில், சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோக்களை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளார். நீச்சல் பயிற்சியின்போது மாணவி உடைமாற்றிய காட்சிகளையும் ரகசியமாக பதிவு செய்து அதையும் வெளியிட்டுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.