

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்து முக்கிய குற்றவாளி செல்வம், தனது கூட்டாளிகளுடன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரான இவர், அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கொட்டகை அமைத்து ரூ.500 கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. கடந்த மார்ச் 30-ம் தேதி ரூ.86 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், 5 வாக்கி டாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ஏர்கன், பணம் எண்ணும் இயந்திரம், பிரின்டிங் இயந்திரம், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை நிற தாள்கள், லேப்டாப், காவலர் சீருடை, ஆர்பிஐ முத்திரை உள்ளிட்டவற்றை ராமநத்தம் போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையில், செல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கள்ள நோட்டு அச்சடித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் செல்வத்துக்கு உடந்தையாக இருந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய செல்வத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் திராவிட மணி அறிவித்தார். செல்வத்தை பிடிக்க, கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், ரவிச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அவரது இருப்பிடம் குறித்து செல்போன் வாயிலாக அறிந்த தனிப்படை போலீஸார், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையில் கர்நாடகாவுக்கு சென்றனர். அங்குள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் செல்வம் தங்கியிருப்பதை உறுதிசெய்த தனிப்படையினர், அவரைச் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் வல்லரசு, ஆறுமுகம், பெரியசாமி, சூரியா, டான் என்கிற பிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்து, ராமநத்தம் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பிடிப்பட்டவர்களிடம், கள்ள நோட்டு எவ்வளவு நாளாக அச்சடிக்கப்பட்டது, இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது, அந்த நோட்டுகள் யார் மூலம் மாற்றப்பட்டன, கும்பலின் தலைவன் செல்வத்துக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இவர்களின் கூட்டாளிகளில் ஒருவரான அமீர் என்பவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.