

உத்தமபாளையம்: வீட்டு பாதை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (57) இவரது வீட்டின் எதிரே வசித்து வருபவர் ராஜேந்திரன்(60) இருவரிடையே கடந்த ஓராண்டாக பாதை தொடர்பான பிரச்சினையில் முன்விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் (31). ராணுவ வீரரான இவர், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பார்த்திபன், எதிர்வீட்டைச் சேர்ந்த சுந்தர், அவரது மனைவி சுதா(48), மாமனார் முத்துமாயன்(75) ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் முத்துமாயன்(75) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மருமகன் சுந்தர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சுதா பலத்த காயங்களுடன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தந்தை ராஜேந்திரன், தாயார் விஜயா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.