

பூந்தமல்லி: நசரத்பேட்டை அருகே அகரமேல் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே உள்ள அகரமேல் பகுதியில் இன்று (மே 2) ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 பேரையும், ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நசரத்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், “கைது செய்யப்பட்ட 8 பேரும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்துக்கு வந்து, அகரமேல் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் விற்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாத இவர்கள் போலியான ஆதார் கார்டுகள் வைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கைதானவர்கள் வங்கதேசம் நாட்டில் உள்ள குன்கா என்ற பகுதியிலிருந்து, கடற்கரையோரம் நடந்தே மேற்கு வங்க மாநிலம் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இதுபோல் அகரமேல் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்த வேறு யாரும் தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.