

சென்னை: ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கும்பல் ஒன்று வாங்கி, அதை அதிக விலைக்கு சட்ட விரோதமாக பிளாக்கில் விற்பனை செய்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் கோவை ராம் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை கோவை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி, 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை மையமாக வைத்து சென்னையில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணையில் வட சென்னையில் யானைகவுனி பகுதியில் ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் நடைபெற்றதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதில், தொடர்புடைய ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமார் உள்பட 10 பேரை பிடித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.