

சென்னை: காரை வீட்டின் முன்பாக பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பில் சமரசம் ஏற்பட்டதையடுத்து இருதரப்பிலும் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை முகப்பேர் பகுதியில் வீட்டின் முன்பாக காரை பார்க்கிங் செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகனான ஆத்திச்சூடிக்கும், சின்னத்திரை நடிகரான தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் ஜெ.ஜெ.நகர் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பிலும் வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில் தங்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் அந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என ஆத்திச்சூடி, மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி ஆகியோர் தரப்பிலும், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரி்த்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இதுதொடர்பாக இருதரப்பிலும் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.