

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டனர்.
பழநி அருகே பாலசமுத்திரம் அடுத்துள்ள பாலாறு பகுதியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மின் இணைப்புக் கேட்டு ஒப்பந்ததாரர் முருகானந்தம், பழநி நகர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதைப் பரிசீலனை செய்த மின் வாரிய உதவிப் பொறியாளர் சிவக்குமார் (40), மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். பின்னர், போலீஸார் ஏற்பாட்டின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் நேற்று முருகானந்தத்தின் சகோதரர் மருதராஜ் கொடுத்துள்ளார்.
அப்போது, டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீஸார், உதவிப் பொறியாளர் சிவக்குமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், சிவக்குமாரைக் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் லஞ்சம் வாங்கிய 3 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.