குழந்தையை கொடுத்துச் சென்றவர் திரும்ப வராததால் சேலம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்த இளைஞர்!

நாகர்கோவில் - பெங்களூரு ரயிலில் வந்த வந்த பயணி ஒப்படைத்த குழந்தையுடன் சேலம் ரயில்வே போலீஸார்
நாகர்கோவில் - பெங்களூரு ரயிலில் வந்த வந்த பயணி ஒப்படைத்த குழந்தையுடன் சேலம் ரயில்வே போலீஸார்
Updated on
1 min read

சேலம்: மதுரையில் இருந்து சேலம் வந்த ரயிலில் 8 மாத ஆண் குழந்தையை பயணி ஒருவரிடம் கொடுத்தவர், மீண்டும் வராதால், அந்தக் குழந்தை சேலம் ரயில்வே போலீஸார் மூலம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

நாகர்கோவில்- பெங்களூரு விரைவு ரயிலில் இன்று (ஏப்.30) அதிகாலை சேலத்துக்கு வந்த இளைஞர் ஒருவர், கையில் 8 மாத ஆண் குழந்தையுடன் சேலம் ரயில்வே காவல் நிலையத்துக்கு வந்தார். பின்னர், ரயில்வே போலீஸாரிடம் அவர் குழந்தையை ஒப்படைத்தார்.குழந்தை குறித்து போலீஸார் விசாரித்தபோது, அவர் தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியைச் சேர்ந்த வீரமணி (29) என்பதும், சென்னையில் சினிமா உதவி இயக்குநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அவர், ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, மதுரையில் 8 மாத குழந்தையுடன் வந்த ஒருவர், குடிநீர் பாட்டில் வாங்கி வரும்வரையிலும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி, வீரமணியிடம் கொடுத்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார். ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டு விடவே, குழந்தை குறித்து ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, சேலம் ரயில்வே போலீஸாரிடம் விவரத்தைக் கூறி குழந்தையை வீரமணி ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே போலீஸார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர், குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், “மதுரை ரயில் நிலையத்தில் பயணியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதால், இது குறித்து மதுரை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, அங்குள்ள போலீஸார் உரிய விசாரணை நடத்தி, குழந்தையை உரியவரிடம் ஒப்படைப்பர். அதுவரை, குழந்தைகள் நல காப்பகத்தினர், குழந்தையை பராமரிப்பர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in