

சென்னை: மாமியார் கொலை வழக்கில் மருமகனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (26). இவரது மனைவி சுதா. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுதா கோபித்துக் கொண்டு வியாசர்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதையறிந்து 2021 டிசம்பவர் 19-ம் தேதி பாலாஜி மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர மாமியார் லதா வீட்டுக்கு சென்றார்.
மகளை அழைத்துச் செல்ல லதா எதிர்ப்பு தெரிவித்ததோடு, மருமகனுடன் தகராறில் ஈடுபட்டார். தாய்க்கு ஆதரவாக சுதாவும் சண்டையிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பாலாஜி அங்குள்ள சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்து மாமியார் மற்றும் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில், மாமியார் லதா உயிரிழந்தார். மனைவி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக எம்.கே.பி. நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனர். அதோடு மட்டும் அல்லாமல் எம்.கே.பி. நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் முறையாக விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்து, சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
பாலாஜி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கடந்த 28-ம் தேதி, கொலை குற்றத்திற்கு ஆயுள் சிறை தண்டனை, கொலை முயற்சி குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று கொடுத்த காவல் ஆய்வாளர் அம்பேத்கரை காவல் ஆணையர் அருண் இன்று நேரில் அழைத்த பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.