

சென்னை: அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் கருங்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதியா என தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட், நட்டுகளை கடந்த 25-ம் தேதி மர்ம நபர்கள் கழற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்தது நேற்று முன்தினம் நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டது. திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில், அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்னல் செயல்படவில்லை என தெரியவந்ததால் அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரயில் செல்லும் பாதையை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்துக்கு இடையே கருங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கற்களை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிவு செய்து, ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்ட சம்பவம், கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் என 3 நாட்களில் அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நடந்துள்ளதால் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் கலக்கம் அடைந்துள்ளனர். அம்பத்தூர் - பட்டரவாக்கம் இடையே சிக்னலில் ஏற்பட்ட பழுதை உடனடியாக கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.