விருத்தாசலம் தம்பதி கொலை வழக்கில் 13 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் - பின்னணி என்ன?

கொல்லப்பட்ட கண்ணகி, முருகேசன்,
கொல்லப்பட்ட கண்ணகி, முருகேசன்,
Updated on
1 min read

விருத்தாசலம்: விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில், பெண்ணின் தந்தை, சகோதரர், வழக்கை நடத்திய ஆய்வாளர் உட்பட 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். பட்டியலினத்தை சேர்ந்த இவரும், அருகில் உள்ள புதுகூரைப்பேட்டையை சேர்ந்த மாற்றுச் சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவரும் காதலித்து வந்தனர். கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இவர்கள் இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் 2003 ஜூலை 17-ம் தேதி காதில் விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். விருத்தாசலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு 2004 -ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 2021 செப்டம்பர் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர்கள் மருதுபாண்டி, ரங்கசாமி, உறவினர்கள் கந்தவேலு, மணி, தனவேல், அஞ்சாபுலி, ஜோதி, வெங்கடேசன், ராமதாஸ், சின்னதுரை, இந்த வழக்கை நடத்திய காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகிய 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. முருகேசன் தரப்பை சேர்ந்த அய்யாசாமி, குணசேகரன் விடுவிக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற அனைவரது ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

கந்தவேலு, ஜோதி, மணி ஆகிய 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், நீதிபதிகள் தான்ஷு தூலியா, பி.கே.மிஸ்ரா அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, அவர்களது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 13 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in