

பூந்தமல்லி: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் இன்று (ஏப்.28) காலை டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், மாங்காடு பகுதியில் 26 பேர், குன்றத்தூர் பகுதியில் 7 பேர் என, வங்கதேசத்தைச் சேர்ந்த 33 உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்து, மாங்காடு அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.கைதானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமூக நல கூடத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைதான 33 பேர் உரிய ஆவணங்களின்றி மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் சட்ட விரோதமாக தமிழகத்துக்குள் வந்தது எப்படி? இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தவர்கள் யார் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால் அவர்களின் முழு விவரங்களை சேகரித்து வரும் டெல்லி போலீஸார், வங்கதேசத்தைச் சேர்ந்த 33 பேர் சதி செயலுக்காக தமிழகத்துக்கு வந்தார்களா? அல்லது தமிழகத்தில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.