

சென்னை: யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ தங்க நகை திருடப்பட்ட வழக்கில் அந்த கடையின் ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் பஹ் சிங் (45). இவர், பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் சிங் (26) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், உரிமையாளர் பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அந்த புகாரில், கடந்த 22-ம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக கடையை சந்தீப் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டு, அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றேன். அங்கு மருந்து வாங்கிவிட்டு சிறிது நேரத்துக்கு பின்னர் கடைக்கு திரும்பி வந்தேன். அப்போது கடையின் இரும்பு கதவு பூட்டாமல், சாத்தப்பட்டிருந்தது. மேலும் கடையிலிருந்த 2 கிலோ 2 கிராம் தங்க நகை திருடப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த சந்தீப் சிங் காணாமல் போயிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
எனவே, தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடிய சந்தீப் சிங்கை கைது செய்து, நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.