

பொள்ளாச்சி: சென்னையில் இருந்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் 3 பேர், ஆற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 3 பேரின் சடலமும், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் 14 மாணவர்கள் மற்றும் 14 மாணவிகள், அக்கல்லூரியின் கிளினிக்கல் தெரபிஸ்ட் சந்தோஷ் (23) என்பவர் தலைமையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் மூலம் கோவை வந்துள்ளனர். கல்லூரியில் இரவு தங்கியிருந்து விட்டு, இன்று காலை 6.30 மணிக்கு இரண்டு சுற்றுலா வேன்கள் மூலம் ஆழியாறு வந்துள்ளனர்.
ஆழியாறு அணை அருகே ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது, பிசியோதெரபி 4-ம் ஆண்டு படிக்கும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), தென்காசியை சேர்ந்த ரேவந்த் (21), 3-ம் ஆண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அருகில் இருந்த மாணவர்கள் அவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.
உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடியதில், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆழியாறு பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் உதவியுடன் 3 பேரின் சடலத்தையும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஆழியாறு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.