சென்னை | மகனுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி கடலில் குதித்து தற்கொலை

சென்னை | மகனுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி கடலில் குதித்து தற்கொலை
Updated on
1 min read

சென்னை: மாயமானதாகக் கூறப்பட்ட, பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி, பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக (திமுக) இருப்பவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக டெய்சி ராணி, மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் அங்குள்ள தேவாலயத்துக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி வீட்டிலிருந்து அவர் திடீரென மாயமானார். பல பகுதிகளிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஜோசப் புகார் அளித்தார். முதல்கட்டமாக ஜோசப் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில், டெய்சி ராணி, ஆட்டோவில் ஏறி பல்லாவரம் வரை சென்றது தெரியவந்தது. அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால், டெய்சி ராணியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை பெசன்ட் நகர் கடற்கரையில் 45 வயதுடைய பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த அந்தப் பெண்மணி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட டெய்சி ராணி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஜோசப் - டெய்சி ராணி தம்பதிக்கு, சாம்சன், சாலமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், அதில் சாலமன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாததால், தாய் - மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, தற்கொலைக்கு இரண்டாவது மகனுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in