நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்: மதுரையில் பரபரப்பு

கஞ்சா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு ஜன்னலை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளால் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு ஜன்னலை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளால் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
2 min read

மதுரை: மதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சகோதரர்கள் தண்டனையை கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீரைத்துறை காவல் சரகத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் கிழக்கு முனியாண்டி கோவில் அருகே கருவேலங்காட்டிற்குள் கடந்த 2024-ல் 25 கிலோ கஞ்சாவுடன் பதுங்கியிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் (23), அவரது சகோதரர் ஜாக்கி என்ற பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரகுமார் முன்பு இன்று (ஏப்.24) விசாரணைக்கு வந்தது. இதற்காக மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன் வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக மூவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை கேட்டு ஆத்திரம் அடைந்த பாண்டியராஜனும், ஜாக்கி என்ற பிரசாந்தும் நீதிமன்ற கண்ணாடிகளை கைகளால் அடித்து உடைத்தனர். ஜன்னல் கண்ணாடிகள் கைகளில் குத்தி இருவரின் கைகளிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் நின்றிருந்த போலீஸார் பிடித்து நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்து வந்தனர். நீதிமன்ற அறைக்கு வெளியே போலீஸாரின் பிடியிலிருந்து திமிறியபடி நீதிபதியின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

நாங்கள் ரவுடி வெள்ளைக்காளி மற்றும் சமீபத்தில் கிளாமர் காளி கொலை வழக்கில் கைதாகி பின்னர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சந்திரபோஸ் கூட்டாளிகள் என்றும், சந்திரபோஸை ஏன் என்கவுண்டர் செய்தீர்கள்?. சிறைக்கு போய்விட்டு வெளியே வருவோம். அப்போது என்ன நடக்கிறது என பாருங்கள் என மிரட்டல் விடுத்தனர். தங்களை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்த போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர்.

நீதிமன்றத்தில் நின்றிருந்த வழக்கறிஞர்களையும் மிரட்டினர். பின்னர் போலீஸார் இருவரையும் இறுக்கிப் பிடித்தபடியே நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வந்து போலீஸ் வேனில் ஏற்றி மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, நீதிமன்றத்தில் கலவரம் செய்தது தொடர்பாக இருவர் மீதும் மதுரை அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in