

கடலூர்: கடலூரில் தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் சொகுசு பேருந்து இன்று( ஏப்.24) அதிகாலை சுமார் 2 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. சோதனை சாவடியில் இருந்த போலீஸார் அந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த ஆவணங்களும் இன்றி ரூ 40 லட்சம் ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பயணம் செய்த சென்னை எல்லீஸ் ரோடு பகுதியை சேர்ந்த முகமது மிதார் மகன் நவீத் அன்வர்(26) என்பவரை போலீஸார் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எந்த விதமான ஆவணங்களும் இன்றி எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம் ரூ. 40 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். தனியார் சொகுசு பேருந்தில் ஹவாலா பணம் ரூ 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.