

சென்னை: மாணவர்களை குறிவைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பிரிவு போலீஸார் அனைத்து காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் ஷெனாய் நகர், புல்லா அவென்யூ பகுதியில் உள்ள ஸ்கேடிங் பார்க் அருகே கண்காணித்தனர்.
அங்கு சட்ட விரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த தரமணி கருமாரியம்மன் கோயில் 3-வது குறுக்குத் தெரு பயாஸ் அகமது (26), தி.நகர் நீலாங்கரைத் தெரு தமீம் அன்சாரி பரூக் (27), சாலிகிராமம் சண்முக சுந்தரம் தெரு முகமது நூருதீன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் வெளி மாநிலத்திலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து சென்னையில் மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.