

சென்னை: அசாம் மாநிலத்திலிருந்து சென்னைக்கு ஹெராயின் கடத்தி வந்ததாக அம்மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் புனித தோமையர் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் புனித தோமையர் மலை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த போலீஸார் ஹெராயின் கடத்தி வந்ததாக அசாம் மாநிலம், நாகான் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்கள் அவர்களது சொந்த மாநிலத்திலிருந்து ஹெராயின் போதைப் பொருளை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.