

ஓசூர்: தளியில் ஏட்டை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகள் தண்டனை வழங்கி தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஆயுதம் வழங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மாரியப்பன் (55). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்.20-ம் தேதி தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள கும்மளாபுரம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாகக் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (37), தளி உமேஷ் (33), பெங்களூரு ஒசரோடு மது (33), ஆகியோர் போதையில் வந்தனர்.
அவர்களிடம் மாரியப்பன் விசாரணை நடத்தினார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், மாரியப்பனை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை சக காவலர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலம் அடைந்தார்.
இதுதொடர்பாக தளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சீனிவாசன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சீனிவாசன், மது ஆகியோருக்கு கொலை முயற்சி குற்றத்துக்கு 10 ஆண்டு தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையில் ரூ.25 ஆயிரம் பாதிக்கப்பட்ட தற்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக உள்ள மாரியப்பனுக்கு வழங்க வேண்டும். சோதனைச் சாவடியில் பணியில் உள்ள போலீஸாருக்குத் தகுந்த ஆயுதங்கள் வழங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலாருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் குற்றம்சட்டப்பட்ட உமேஷ் உயிரிழந்து விட்டார்.