

சென்னை: சிறுவனை நாய் கடித்த விவகாரத்தில் தட்டிக் கேட்ட தாய் மீது நாயின் உரிமையாளர் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (40). இவரது மகன் முகமது ஜமால் (12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜமால் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வளர்க்கும் நாய், ஜமாலை கடித்துள்ளது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த தாய் ஜீனத்தும், அவரது குடும்பத்தினரும் நாயிடம் இருந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மகனை நாய் கடித்ததால் கோபம் அடைந்த ஜீனத், நாயின் உரிமையாளரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த நாயின் உரிமையாளர் ஜீனத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.