

சென்னை: வியாசர்பாடியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தந்தையை கொலை செய்தவரை 5 ஆண்டுகள் காத்திருந்து மகன் பழி தீர்த்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர், 11-வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40). இவர் மீது 3 கொலை உட்பட 12 குற்ற வழக்குகள் உள்ளன. ‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடியான இவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து, இருப்பிடத்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மணலி சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவுக்கு மாற்றினார்.
ஈஸ்டர் பண்டிகைக்காக நேற்று முன்தினம் ராஜ் வியாசர்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். மாலை 5.30 மணியளவில் மனைவி தீபாவுடன் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு மற்றும் 4-வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் அரிவாள், பட்டா கத்தியால் ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், மனைவி கண் எதிரே ராஜ் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து 2 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர்.
இதன் தொடர்ச்சியாக வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த சூர்யா (27), அவரது நண்பர்கள் எம்கேபி நகரில் உள்ள ஜெ.ஜெ.ஆர். நகரைச் சேர்ந்த ஶ்ரீராம் (25), அதே பகுதி அஜித் என்ற சப்பை மூக்கு அஜித் (25), முருகன் (28) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 5 பட்டாக் கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 4 பேரின் கைகளிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது விழுந்து காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த ரவி, வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி பப்லு, அதே பகுதி உதயசூரியன் நகரைச் சேர்ந்த ராஜ் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொண்டை ராஜின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ராஜின் மகனான சூர்யா, தந்தை கொலைக்கு பழிவாங்க 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நண்பர்களுடன் சென்று தொண்டை ராஜை வெட்டி கொலை செய்துள்ளார். இருப்பினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.