

சென்னை: ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வந்த இடத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர், 11வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ் என்ற தொண்டை ராஜ் (40).
இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்குகள் உள்ளது.‘ஏ பிளஸ்’ பிரிவு ரவுடியான இவருக்கு எதிர் தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து, இருப்பிடத்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் மணலி சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவுக்கு மாற்றினார்.
இந்நிலையில், நேற்று ஈஸ்டர் பண்டிகையை என்பதால் ராஜ் வியாசர்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை 5.30 மணியளவில் வியாசர்பாடி, எஸ்எம் நகர் மெயின் ரோடு 4வது குறுக்குத் தெரு சந்திப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில், பலத்த காயம் அடைந்த ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆட்டோவில் ஸ்டான்லி அரசு மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இக்கொலை தொடர்பாக வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் 2 பேரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.