கயத்தாறு அருகே 27 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 5 பேர் கைது: 2 பேர் தலைமறைவு

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
Updated on
1 min read

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர்.

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.

கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டை செல்லும் சாலையில் தனியார் காற்றாலைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மூட்டைகளை அடுக்கிவைத்து, தார்ப்பாய் கொண்டு மூடியிருப்பதை பார்த்தனர். மூட்டைகளை சோதனையிட்டபோது, அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் அங்கு வந்து, தலா 40 கிலோ வீதம் 680 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 27,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து (39), கொப்பம்பட்டி அழகுபாண்டி, காப்புலிங்கம்பட்டி ராஜாராம், விஜயராஜ்(44), செல்லையா (59), கோவில்பட்டி காந்தி நகர் முருகன் (35), வாகைத்தாவூர் சுபாஷ் (33) ஆகியோர் கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சப்பாணிமுத்து, விஜயராஜ், செல்லையா, முருகன், சுபாஷ் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான அழகுபாண்டி, ராஜாராம் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in