

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து இளைஞரை கடத்தி ரூ.5 லட்சம் பணம், 100 கிராம் நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அந்த இளைஞர் வீட்டின் அருகே சேவியர் தெருவில் உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஒருவர், அந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த நபர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த 4 பேருடன் சேர்ந்து, அந்த நபர் இளைஞரை மிரட்டி ஆட்டோவில் கடத்தி சென்றார். முத்தியால்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, 5 பேரும் அந்த இளைஞரிடம் ரூ.5 லட்சம் பணம், 100 கிராம் நகைகளை கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும், பணம், நகைகளை தரவில்லை யென்றால், இளைஞரையும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், பயந்துபோன அந்த இளைஞர், பணம், நகைகளை வீட்டில் இருந்து எடுத்து வந்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, இளைஞரை கடத்திய அதே இடத்தில் அந்த நபர்கள் இறக்கி விட்டுள்ளனர். வீட்டுக்கு வந்த அந்த இளைஞர் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளைஞரை கடத்தி சென்றது, அயனாவரத்தை சேர்ந்த வசந்த குமார் (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வசந்தகுமாரை கைது செய்து, அவரது ஆட்டோவை கடந்த 17-ம் தேதி போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மண்ணடியை சேர்ந்த ரஞ்சித் (31), கிளைவ் பேட்டரியை சேர்ந்த விஜயகுமார் (30), பாரிமுனையை சேர்ந்த ஆனந்த் (21) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.